H9) தவாஃப் அல்குதூம்
தவாஃப் அல்குதூம்
அவரவருக்குரிய எல்லைகளில் இஹ்ராம் கட்டி, மக்காவுக்குள் நுழைய வேண்டும். மக்காவில் நுழைந்தவுடன் தவாஃப் செய்ய வேண்டும். இதுவே, தவாஃபுல் குதூம் என்று கூறப்படுகிறது.
குதூம் என்றால் வருகை தருவது என்று பொருள்.
மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு தவாஃப் அல்குதூம் என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் தான் தவாஃப் அல்குதூம் செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் கிடையாது. ஒருவர் இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்ய வேண்டும்.
ஹஜ்ஜுக்குரிய மாதங்களான ஷவ்வாலில் அல்லது துல்கஃதாவில் இஹ்ராம் கட்டி மக்காவுக்குள் அவர் நுழைந்தால் அப்போதே இந்த தவாஃபை செய்து விட வேண்டும்.
தவாஃப் அல்குதூம் செய்யும் முறை
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல்குதூம் செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் சற்று ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1644, 1617
வலது தோள் புஜம் (மட்டும்) திறந்திருக்கும்
தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது தோள் புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்கள்: திர்மிதீ 787, அபூதாவூத் 1607
கஃபாவின் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் எனும் கறுப்புக் கல் பதிக்கப்பட்டுள்ளது. தவாஃப் செய்யும் போது ஹஜருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையிலிருந்து துவக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதிலிருந்து ஹஜருல் அஸ்வத் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2213, 2214.
பொதுவானது
தவாஃபுல் குதூமில் சற்று வேகமாக சுற்றவேண்டிய முதல் 3 சுற்றுக்களிலும் 'ரமல்' என்று சொல்லப்படும் புஜத்தை குலுக்கவேண்டும் என்பது ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பொதுவானது தான். பெண்களுக்கு இதில் விதிவிலக்கு இந்திருக்குமானால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் விளக்கியிருப்பார்கள். எனினும், தோள் புஜத்தை திறந்திக்க வேண்டும் என்பது ஆண்களுக்கு மட்டும் உரியது.
தவாஃபுக்கு உளூ கட்டாயமில்லை.
தவாஃப் செய்வதற்கு, உளூ கட்டாயம் இல்லை. எனினும் தவாஃபிற்கு பின்னர் 2 ரகஅத் தொழ வேண்டியிருப்பதால், தவாஃபிற்கு முன்னரே உளு செய்து கொள்வது, நம் சிரமத்தை குறைக்கும்.
No comments