H7) தல்பியா கூற ஆரம்பித்தல்
தல்பியா கூற ஆரம்பித்தல்
இஹ்ராம் கட்டியவுன் அதாவது, நிய்யத் கூறிய பிறகு, தல்பியாவை கூற ஆரம்பித்து விட வேண்டும். தல்பியாவின் வாசகம் வருமாறு:
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَك
"லப்பைக், அல்லாஹும்ம லப்பைக்,
லப்பைக், லாஷரீக லக லப்பைக்,
இன்னல் ஹம்த, வன்னிஃமத
லக வல்முல்க், லாஷரீக லக்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1549, 5915
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ
லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1550
தல்பியாவை உரத்துக் கூறுதல்
திக்ருகள், துஆக்கள் ஆகியவற்றை உரத்த குரலில் கூறுவது திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தல்பியாவை மட்டும் உரத்த குரலில் சொல்லுமாறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.
”என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி)
நூல்கள்: ஹாகிம், பைஹகீ
தல்பியாவை நிறுத்த வேண்டிய நேரம்
இஹ்ராம் கட்டியவர்கள், இஹ்ராம் கட்டியதிலிருந்து ஆரம்பித்து எல்லா நேரங்களிலும் அதிகமதிகம் தல்பியாவைக் கூற வேண்டும். எனினும், ஹரம் எல்லைக்கு வந்ததும், தக்பீரை நிறுத்த வேண்டும்.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள்.
நூல்: புகாரி 1573
பிறகு மீண்டும் தல்பியா
மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் ஹரம் எல்லைக்கு வந்ததும் தக்பீரை நிறுத்த வேண்டும். பிறகு மீண்டும், இஹ்ராம் கட்டிய பிறகு, தல்பியாவை ஆரம்பிக்க வேண்டும். அதாவது, ஹஜ் தமத்துவ் செய்பவர்கள், முதலில் உம்ரா செய்து முடிப்பார்கள். பிறகு துல்ஹஜ் பிறை 8 – ல், ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் கட்டுவார்கள். அப்போது, மீண்டும் தல்பியாவை கூற ஆரம்பிக்க வேண்டும்.
அப்போது ஆரம்பித்து, ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடிக்கும் வரை, தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்குரிய ஆதாரம்.
”நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினா வரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.”
அறிவிப்பவர்: ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1544, 1683, 1687.
எந்தெந்த இடங்களில் குறிப்பிட்ட துஆக்கள் ஓத வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளதோ, அந்த நேரங்கள் தவிர எல்லா நேரமும் தல்பியாவை அதிகமதிகம் கூற வேண்டும்.
No comments