H38) மீண்டும் மினாவிற்கு திரும்புதல்
மீண்டும் மினாவிற்கு திரும்புதல்
தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃபை செய்து விட்டு மீண்டும் மினாவுக்கு திரும்ப வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று தவாஃப் அல் இஃபாளா செய்து விட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2307
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட்டு, வாகனத்தில் ஏறி தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும், மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தான் ஹஜ் செய்துள்ளதால் வெவ்வேறு ஆண்டுகளில் நடந்ததாகக் கருத முடியாது.
தவாஃபுல் இஃபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்து விட்டதால் அங்கே லுஹர் தொழுது விட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒரு முறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக் கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.
தாமதமானால் குற்றமில்லை
மினாவில் கல்லெறிவதற்கு தாமதமானால், அதிகமான கூட்ட நெரிசல் இருந்தால், கல்லெறிவதற்கு முன்னரே இந்த தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃபை செய்து விட்டு, பிறகு கல்லெறியலாம். தவறில்லை. அல்லது கல்லெறிந்த பிறகு இந்த தவாஃபை செய்யலாம். அதிலும் தவறில்லை.
”முன் பின்னாக செய்யப்பட்ட எதைக் குறித்து கேட்கப்பட்ட போதும் ”செய்து கொள்! தவறேதும் இல்லை” என்றார்கள்.” (புகாரி 124, 1738, 83, 1736, 6665)
No comments