H32) ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது
ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது
ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வதை அடைந்ததும் அதைத் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1611
அந்தக் கல்லில் வாய் வைத்து முத்தமிடுவது என்பது இதற்கு அர்த்தமில்லை. கையால் அதைத் தொட்டு விட்டு கையை முத்தமிடுவது என்பதே இதன் அர்த்தமாகும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை என அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாபிவு
நூல்கள்: புகாரி 1606
கையால் அதைத் தொட முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கைத்தடி போன்றவற்றால் அதைத் தொட்டு அந்தக் கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும் போது தம்மிடமிருந்த கைத்தடியால் அதைத் தொட்டு கைத்தடியை முத்தமிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆமிர் பின் வாஸிலா (ரலி)
நூல்: புகாரி 1608
சைகை செய்யலாம்
கைத்தடி போன்றவற்றால் கூட அதைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கம் அதிகமாக இருந்தால் நமது கையால் அதைத் தொடுவது போல் சைகை செய்யலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். (அல்லாஹு அக்பர் என்று) தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293
சுருக்கமாக
1. அதனை கையால் தொட்டு, கையை முத்தமிடுவது
2. முடியாவிட்டால், கைத்தடியால் தொட்டு அதை முத்தமிடுவது
3. அதற்கும் முடியாவிட்டால், சைகை செய்து, ”அல்லாஹு அக்பர்” கூறுவது.
முண்டியடிப்பது கூடாது
ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டுமென்பதற்காக மற்றவர்களை இடித்துக் கொண்டு செல்லக் கூடாது. பிறரை இடித்துத் தள்ளி, முண்டியடிப்பது மற்றவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். நமது அறியாமையினால், கட்டுக்கோப்பு சீர்குழைய நாம் காரணமாகி விடக் கூடாது.
குறிப்பாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்களை இடித்துக் கொண்டு செல்வது எக்காரணத்திற்காகவும் அனுமதி இல்லை. மேற்குறிப்பிட்டுள்ள 3 வழிகளில் எந்த வகையிலும் இந்த சுன்னத்தை நிறைவேற்றலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஹஜருல் அஸ்வத்தை தொடுவதற்கு என்று தனிச்சிறப்பு எதுவும் கிடையாது. தொட்டு முத்தமிடுவது எப்படி சுன்னத்தோ, அதே போன்று சைகை செய்வதும் சுன்னத் தான்.
எந்த சக்தியும் அற்ற கல்
ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு எந்த சக்தியும், ஆற்றலும் கிடையாது. அதனால் யாருக்கும் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது.
எனவே, ஹஜருல் அஸ்வதை முத்தமிடும் போது அது கடவுள் தன்மை கொண்டது என்ற எண்ணம் வந்து விடக் கூடாது. நபியவர்கள் அந்த கல்லை முத்தமிட்டார்கள். அதனால் நாமும் முத்தமிடுகிறோம். இந்த இடத்தில் உமர் (ரலி) அவர்களின் கூற்றை நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.
”நீ எந்த நன்மையும் தீமையும் செய்ய முடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்கா விட்டால் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்று உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும் போது கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆபிஸ் பின் ரபீஆ (ரலி)
நூல்: புகாரி 1597, 1605, 1610
ஹிஜ்ரையும் சேர்த்து சுற்ற வேண்டும்
கஃபா ஆலயம் செவ்வகமாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அதன் ஒரு பகுதியில் அரை வட்டமான ஒரு பகுதியும் அமைந்திருக்கும். அதுவும் கஃபாவைச் சேர்ந்ததாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைப் பருவத்தில் மக்கா வாசிகள் கஃபாவைப் புணர் நிர்மானம் செய்த போது பொருள் வசதி போதாமல் செவ்வகமாகக் கட்டி விட்டனர்.
ஹிஜ்ர் எனப்படும் இந்தப் பகுதியும் கஃபாவில் கட்டுப்பட்டுள்ளதால் அதையும் உள்ளடக்கும் வகையில் தவாஃப் செய்வது அவசியம்.
”நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்தனர். ஆலயத்தின் உள்ளே தொழ விரும்பினால் இங்கே தொழு! ஏனெனில், இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டிய போது அதைச் சுருக்கி விட்டனர். மேலும், இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்தி விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதீ 802
(பார்க்க: புகாரி 126, 1583, 1584, 1585, 1586, 3368, 4484, 7243)
கஃபாவின் உண்மையான வடிவம் செவ்வகமானது அல்ல என்பதையும், அரை வட்டமான பகுதியும் சேர்ந்ததே கஃபா என்பதையும் இதிலிருந்து அறியலாம்.
No comments