H30) தலைமுடி வழித்தல்
தலைமுடி வழித்தல்
பத்தாம் நாள் அன்று பலி கொடுத்த பின்னர், தலை முடியை வழித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்.
முழுமையாக மழித்துக் கொள்வதே சிறந்ததாகும்
தலை மயிரைச் சிறிதளவு குறைத்துக் கொள்ளவும், அல்லது முழுமையாக மழித்துக் கொள்ளவும் அனுமதி உண்டு; என்றாலும் முழுமையாக மழித்துக் கொள்வதே சிறந்ததாகும். பெண்கள் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
”இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக என்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக) என்று கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1727
பெண்கள் தலை மழித்தல் கிடையாது
”தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1694
வலது புறமாக ஆரம்பிக்க வேண்டும்
முடியை மழிக்கும் போது, வலது புறமாக ஆரம்பிக்க வேண்டும். முடி மழிக்க வேண்டியவருக்கு வலதுபுறம் என்பது முடி எடுப்பவருக்கு இடதுகையின் பக்கமாக இருக்கும். எனவே, முடி எடுப்பவர் நமக்கு வலதுபுறமாக ஆரம்பிக்கிறாரா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.
No comments