எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

தொழுகையின் விரிவாக்கம்

 தூய்மை

தொழுகையை நிறைவேற்ற உடல், உடை, இடம் ஆகியவை தூய்மையாக இருப்பது அவசியமாகும். உடலுறவு கொண்டிருத்தாலோ, அல்லது இந்திரியம் வெளியாகி விட்டாலோ குளிப்பது கடமையாகும். குளிப்பு கடமையில்லாத சூழ்நிலைகளில் உளு மட்டும் செய்துவிட்டு தொழவேண்டும்.


தொழும் முறை :

🔘 கிப்லா என்னும் கஃபா ஆலயத்தை முன்னோக்கி நின்று கொண்டு, தொழவிரும்பும் தொழுகையை மனதில் நினைக்க வேண்டும்.

🔘 அல்லாஹு அக்பர் என்று கூறி இருகைகளையும் புஜங்களுக்கு நேராக உயர்த்தி, வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது கட்டிக்கொள்ள வேண்டும்.

🔘 பிறகு பின்வரும் பிராத்தனையை -துஆவை- ஓதவேண்டும்.

அல்லாஹும்ம பாயித் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிபி, அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸி அல்லாஹும்மஃக்ஸில் ஃகதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல் பரதி

(அல்லது)

ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக்க வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக்க வலா இலாஹ கைருக்க.


🔘 அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். என  கூற வேண்டும்.

🔘 பிறகு ஃபாத்திஹா சூராவை ஓதவேண்டும். அது:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹும். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் - மாலிகி யவ்மித்தீன். இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்த்தயீன். இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்த்தகீம். ஸிராத்தல்லதீன அன்அம்த்த் அலைஹிம். கைரில் மஃ(க்)ளுபி அலைஹிம். வலல் ளால்லீன்.- (ஆமீன்.)

🔘 பிறகு குர்ஆனின் சில வசனங்களை ஓத வேண்டும்.

சிறிய அத்தியாயங்களில் சில:

(1) குல் ஹீவல்லாஹீ அஹது - அல்லாஹீஸ் ஸமது லம் யலிது, வலம் யூலது - வலம் ய(க்)குல்லஹீ (க்)குஃபுவன் அஹது.

(2) வல்அஸ்ர் - இன்னல் இன்ஸான லஃபீ ஹீஸ்ர் இல்லல்லதீன ஆமனு வஅமிலுஸ் ஸாலிஹாத்தி வதவாஸவ் பில்ஹக்கி வதவாஸவ் பிஸ்ஸப்ர்.

(3) இன்னா அஃத்தைநாக்கல் கவ்ஸர் ஃபஸல்லி லிரப்பிக்க வன்ஹர் இன்ன ஷானிஅக்க ஹீவல் அப்தர்.

🔘 பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி ருகூவு செய்யவேண்டும். முதுகை வளைத்துக் குனிந்து இரண்டு கைகளைக் கொண்டு -விரல்களை விரித்தவாறு- முட்டுக்கால்களைப் பிடிக்கவேண்டும். தலையை முதுகின் மட்டத்திற்கு சமமாக வைக்கவேண்டும். இதுவே ருகூவுச் செய்யும் முறையாகும்.


🔘 ருகூவில் ஸுப்ஹான ரப்பியல் அலீம் என்று மூன்று முறை கூற வேண்டும்.

🔘 ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா 
என்று கூறியவாறு ருகூவிலிருந்து எழவேண்டும். பிறகு இரு கைகளையும் புஜத்திற்கு நேராக உயர்த்தி கீழே தொங்கவிட்டவாறு ரப்பனா லகல்ஹம்து என்று கூறவேண்டும்.

🔘 பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி ஸுஜுது செய்ய வேண்டும். முகம் (மூக்கு,நெற்றி) இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக்கால்கள், இரண்டு கால் விரல்களின் உட்பகுதி ஆகிய ஏழு உறுப்புக்களும் பூமியில் படும் வகையில் ஸுஜுது அமைந்திட வேண்டும். மேலும் இரு கால்களின் பாதங்களும் நட்டியவாறு இருக்கவேண்டும். கைகளை விழாவோடு ஒட்டிவைப்பதோ, முழங்கைகளை தரையில்படுமாறு வைப்பதோ கூடாது.


🔘 ஸுஜுதில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா என்று மூன்று முறை கூறவேண்டும்.


🔘 பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஸுஜுதிலிருந்து தலையை உயர்த்த வேண்டும்.

🔘 ஸஜ்தாவிலிருந்து எழுந்து இடது கால்களின் மீது உட்கார்ந்து, வலது காலை நட்டி வைத்திருக்க வேண்டும். வலது தொடையின் மீது வலது கையையும் இடது தொடையின் மீது இடது கையையும் முட்டுக்கருகில் கைவிரல்களை விரிக்காமல் இணைத்தவாறு வைக்கவேண்டும்.


🔘 இந்த இருப்பில் ரப்பிஃ(க்)ஃபிர்லி என்று இரண்டு முறை கூறவேண்டும்.

🔘 பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி முதலில் செய்ததைப்போன்று மீண்டும் ஸஜ்தாச் செய்ய வேண்டும்.

(இதனுடன் ஒரு ரகஅத் முடிந்தது)


🔘 பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து, மீண்டும் நிலைக்கு வரவேண்டும். இரண்டாவது ரகஅத்தை முதல் ரகஅத்தைப் போன்றே தொழவேண்டும். எனினும் இதில் ஃபாத்திஹா சூராவிலிருந்து ஓதவேண்டும். அதற்கு முன்னுள்ள பிராத்தனையை மீண்டும் ஓதவேண்டியதில்லை.


🔘 இரண்டாவது ரகஅத்தின் இரண்டு ஸஜ்தாக்களையும் செய்த பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டு ஸஜ்தாவிற்கும் இடையில் அமர்ந்திருந்தது போன்று அமரவேண்டும்.

🔘 இந்த அமர்வில் அத்தஹிய்யாத் எனும் பின் வரும் பிரார்த்தனையை கூறவேண்டும்.

அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத் துல்லாஹி வபரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு.

(அதனைத் தொடர்ந்து ஸலவாத்து ஓதவேண்டும்).

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹும வஅலா ஆலி இப்ராஹும இன்ன(க்)க ஹமீதுன் மஜீது - வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் - கமா பாரக்த அலா இப்ராஹும வஅலா ஆலி இப்ராஹும இன்ன(க்)க ஹமீதுன் மஜுது .


🔘 இதன் பிறகு தான் விரும்பிய பிராத்தனையைக் கேட்டுக் கொள்ளலாம்.


🔘 பிறகு வலது புறம் முகத்தைத் திருப்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூற வேண்டும். பிறகு இடது புறம் முகத்தைத் திருப்பி அது போன்றே ஸலாம் கூற வேண்டும்.

(இதனுடன் 2 ரகஅத் உடைய தொழுகை நிறைவடையும்.)


🔘 இரண்டு ரகஅத்களை விட அதிகமான ரகஅத் உள்ள தொழுகைகளைத் தொழும்போது இரண்டாம் ரகஅத்தின் அத்தஹிய்யாத்திற்குப் பின் ஸலாம் கொடுக்காமல் மூன்றாம் ரகஅத்திற்காக எழுந்து நிலைக்கு வந்துவிட வேண்டும். அதில் முதலாவது ரகஅத்தில் கைகளை உயர்த்தியது போன்று கைகளை உயர்த்தி பிறகு கட்டிக்கொள்ள வேண்டும். இரண்டு ரகஅத்திற்கு அதிகமான ரகஅத்களில் சூரத்துல் ஃபாத்திஹா மட்டும் ஓதவேண்டும். இறுதி இருப்பில் ஸலாம் கொடுத்து தொழுகையை முடிக்கவேண்டும்.


பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி ருகூவு செய்யவேண்டும். முதுகை வளைத்துக் குனிந்து இரண்டு கைகளைக் கொண்டு -விரல்களை விரித்தவாறு- முட்டுக்கால்களைப் பிடிக்கவேண்டும். தலையை முதுகின் மட்டத்திற்கு சமமாக வைக்கவேண்டும். இதுவே ருகூவுச் செய்யும் முறையாகும்.




சில சட்டங்கள் :

உளுவை முறிக்கும் செயல்கள் : 

சில செயல்களால் உளு முறிந்து விடும். இவைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்து விட்டால் மீண்டும் உளு செய்த பிறகே தொழவேண்டும். அவைகள்:

🔘 மல ஜலம் கழித்தல்

🔘 காற்று பிரிதல்

🔘 இச்சை நீர் வெளிப்படல்

🔘 இன உறுப்பை இச்சையுடன் தொடுதல்

🔘 தூங்குதல்

🔘 ஒட்டக மாமிசம் உண்ணுதல்

தயம்மும் செய்யும் முறை : 

உளு செய்யவோ, குளிக்கவோ தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அல்லது தண்ணீர் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நோய் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் உளு மற்றும் குளிப்புக்கு பகரமாக தயம்மும் செய்து தொழுகையை நிறை வேற்றலாம். தூய்மையான மண்ணில் இரண்டு உள்ளங்கைகளையும் ஒரு முறை அடித்து அதனை முகத்தில் தடவிவிட்டு பிறகு அதனைக் கொண்டு இரண்டு முன்னங்கையில் தடவவேண்டும். இதுவே தயம்மும் செய்யும் முறையாகும்.

பெண்களுக்கு சலுகை : 

மாதவிடாய் காலத்திலும் பிரசவ இரத்த நேரத்திலும் பெண்கள் தொழக்கூடாது. இரத்தம் நின்றவுடன் குளித்துவிட்டு தொழுகையை ஆரம்பிக்கவேண்டும். அந்த காலத்தில் விடுபட்ட தொழுகைகளை தூய்மையான பின் தொழவேண்டியதில்லை.

தொழ மறந்து விட்டால்: 

தொழ மறந்துவிட்டால் நினைவு வந்தவுடனும், தொழும் எண்ணத்துடன் படுத்திருந்து அயர்ந்து தூங்கி விட்டால் விழித்தவுடனும் தாமதிக்காமல் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

சுன்னத் தொழுகை: 

கடமையல்லாத உபரியான தொழுகைக்கு சுன்னத்தான தொழுகை என்று பெயர். கடமையான தொழுகைகளுக்கு முன்பும் பின்பும் இதனை பேணித் தொழுவது அதிக நன்மையைப் பெற்றுத் தரும்.





No comments

Powered by Blogger.