ஜாலர் பரோட்டா
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 4
முட்டை - 2
காரட் - ஒன்று
கறி மசாலா - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி+ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
உருளைக்கிழங்கு - ஒன்று
கொத்தமல்லி - 4 கொத்து
உப்பு - அரை தேக்கரண்டி
செய்முறை:
🔘 சிக்கனை சுத்தம் செய்து கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு மற்றும் காரட் இரண்டையும் தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
🔘 வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு 30 நொடி வதக்கி அதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
🔘 பிறகு நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, காரட் துண்டுகளை போட்டு மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் மூடி வைக்கவும்.
🔘 பின்னர் 3 நிமிடம் கழித்து திறந்து பொடியாக நறுக்கிய வைத்திருக்கும் பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
🔘 அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா ஆகியவற்றை போட்டு கிளறி ஒரு நிமிடம் மூடி விடவும். ஒரு நிமிடம் கழித்து திறந்து மேலே கொத்தமல்லி தழையை தூவி கிளறி விடவும்.
🔘 மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய்யை ஊற்றி அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, 2 நிமிடம் பொரித்து எடுத்து அதை மசாலாவுடன் சேர்த்து அனைத்தும் ஒன்றாகும் படி கிளறி இறக்கவும்.
🔘 நமது இணையத் தளத்தில் கொடுத்திருக்கும் செய்முறைப்படி ஜாலர் மாவு தயாரித்துக் கொள்ளவும ஜாலர் செய்முறை அறிய ஒரு தவாவை அடுப்பில் வைத்து, மேலே லேசாக நெய் தடவவும். ஜாலர் குவளையில் மாவை எடுத்துக்கொண்டு, குவளையை தவாவிற்கு நேராக சுற்றி, மாவை விசிறவும். ஜாங்கிரி, முறுக்கு பிழிவதுபோல் குவளையை சுற்றவும்.
🔘 அதன் பின்னர் ஒரு தட்டில் இரண்டு ஜாலரை வைத்து அதில் தயாரித்த மசாலாவை ஒரு பக்கத்தில் வைத்து அந்த பக்கத்தை மடித்து பிறகு இரண்டு ஓரங்களையும் மடித்து ரோலாக சுருட்டவும்.
🔘 பிறகு ஒரு குழியான தட்டில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும். அதில் தயாரித்த ஜாலர் பரோட்டா ரோலை தோய்த்து எடுத்துக் கொள்ளவும்.
🔘 வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் முட்டையில் தோய்த்து எடுத்த ஜாலர் பரோட்டா ரோலை போட்டு சுற்றிலும் வேகவேண்டும் என்பதற்காக, வாணலியியை கையில் எடுத்து முன்னும் பின்னும் ஆட்டி பரோட்டாவை உருட்டவும். 2 நிமிடம் கழித்து பரோட்டா சுற்றிலும் பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும்.
குறிப்புகள்
1. இஸ்லாமியர்கள் இல்லங்களில் அதிகம் செய்யப்படும் இந்த ஜாலர் பரோட்டா, வரும் விருந்தினர்களுக்கு சிறப்பு உணவாக பரிமாறப்படும். இதற்கு பக்க உணவு எதுவும் தேவையில்லை.
2. இதனை சிக்கன் சேர்க்காமல் காய்கறிகள் மட்டும் சேர்த்து செய்யலாம்.
No comments