87 - Al-A'laa
87 - ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்) (Al-A'laa - الأعلى)
87:1 - (நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
87:2 - அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
87:3 - மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்'.
87:4 - அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
87:5 - பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
87:6 - (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
87:7 - அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
87:8 - அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
87:9 - ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
87:10 - (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
87:11 - ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
87:12 - அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
87:13 - பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
87:14 - தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
87:15 - மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
87:16 - எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
87:17 - ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
87:18 - நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-
87:19 - இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
No comments