83 - Al-Mutaffifin
83 - ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோச (Al-Mutaffifin - المطففين)
83:1 - அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்".
83:2 - அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
83:3 - ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
83:4 - நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
83:5 - மகத்தான ஒரு நாளுக்காக,
83:6 - அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-
83:7 - ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது.
83:8 - 'ஸிஜ்ஜீன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
83:9 - அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.
83:10 - பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
83:11 - அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
83:12 - வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
83:13 - நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான்.
83:14 - அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.
83:15 - (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
83:16 - பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
83:17 - "எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
83:18 - நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் "இல்லிய்யீ"னில் இருக்கிறது.
83:19 - "இல்லிய்யுன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
83:20 - (அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.
83:21 - (அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.
83:22 - நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) 'நயீம்' என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
83:23 - ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.
83:24 - அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.
83:25 - (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
83:26 - அதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.
83:27 - இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும்.
83:28 - அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.
83:29 - நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
83:30 - அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.
83:31 - இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.
83:32 - மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், "நிச்சமயாக இவர்களே வழி தவறியவர்கள்" என்றும் கூறுவார்கள்.
83:33 - (முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!.
83:34 - ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.
83:35 - ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
83:36 - காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்).
No comments