7) மக்காவிற்குள் நுழைதல்
மக்காவிற்குள் நுழைதல்
மக்காவுக்குள் நுழைவதற்கு முன் குளிப்பது நபி வழியாகும்.
”இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரமை அடைந்ததும் தல்பியாவை நிறுத்தினார்கள். தூதுவா என்ற இடத்தில் இரவில் தங்கி விட்டு அந்த இடத்திலேயே சுப்ஹு தொழுது, பிறகு குளித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.”
அறிவிப்பவர்: நாபிவு
நூல்: புகாரி 1573
மக்கா நகரின் புனிதம்
மக்கா நகரை இறைவன் புனித பூமியாக ஆக்கியிருக்கிறான். அதன் புனிதம் கெடாத வகையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் புனிதத் தன்மை மக்கா நகருக்கு மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஹரம் எல்லை முழுவதற்கும் பொதுவானதாகும்.
ஹரம் எல்லையை அடையாளம் காட்டுவதற்காக ஐந்து இடங்களில் ஒரு மீட்டர் உயரத்தில் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஐந்து எல்லைகளுக்கும் உட்பட்ட இடங்கள் புனிதமான இடங்களாகும்.
மக்காவுக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்யீம் என்ற இடம்
வடக்கே பனிரெண்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அளாஹ் என்ற இடம்
கிழக்கே பதினாறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஜியிர்ரானா என்ற இடம்
வடமேற்கே பதினான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வாதீ நக்லா என்ற இடம்
மேற்கே பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹுதைபியா எனும் இடம்
ஆகியவையே அந்த ஐந்து எல்லைகளாகும். இந்த ஐந்து எல்லைகளுக்கு உட்பட்ட இடங்கள் ஹரம் எனும் புனிதமான இடங்களாகும்.
இந்த இடங்களின் புனிதத்தை எவ்வாறு மதிப்பது?
அல்லாஹ் மக்கா நகரைப் புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், அங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 104, 1832, 4295.
No comments