தாளிச்சா (3)
தேவையான பொருட்கள்:
ஆட்டிறைச்சி - 300 கிராம்
கத்திரிக்காய் - 5
உருளைக்கிழங்கு - 4
கேரட் - 3
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 1
துவரம் பருப்பு - 200 கிராம்
கறி மசாலா - ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
தேங்காய் பூ - ஒரு கப்
புளி - எலுமிச்சை பழ அளவு
உப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3/4 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
ஏலக்காய் - 4
எண்ணெய் - கால் கப்
கிராம்பு - 2
பட்டை - பாதி
மல்லி தூள் - கால் கப்
செய்முறை:
🔘 கத்திரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் நான்கு துண்டுகளாக நறுக்கவும். காரட்டை வட்டமாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிதாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். தக்காளியை 4 துண்டுகளாக நறுக்கவும்.
🔘 தேங்காயை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். மாங்காய் கிடைக்கும் காலங்களில் மற்ற காய்களுடன் மாங்காயையும் துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ளவும். தாளிச்சாவில் மாங்காய் சேர்த்தால் நல்ல சுவையுடன் இருக்கும். கறியை சற்று பெரிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
🔘 குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டுப் பொரிக்கவும்.
🔘 பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு அரை நிமிடம் வதக்கி, அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
🔘 அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு மேலும் அரை நிமிடம் வதக்கவும்.
🔘 பின்னர் நறுக்கி வைத்துள்ள கறித் துண்டங்களைப் போட்டு மசாலாவுடன் சேரும்படி பிரட்டி விடவும்.
🔘 பருப்பை கழுவி சுத்தம் செய்து அத்துடன் சேர்க்கவும். நறுக்கிய பாதியளவு தக்காளியை போட்டு கிளறவும்.
🔘 பிறகு மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு, கொத்தமல்லி போட்டு கிளறி விடவும். (கறி, பருப்பு இரண்டும் வேகும் அளவு தண்ணீர் சேர்க்கவும்.)
🔘 குக்கரை மூடி வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து 3 விசில் வரும் வரை வேக விடவும்.
🔘 3 விசில் வந்த பிறகு குக்கரை இறக்கிவிடவும். கறி நன்கு வெந்திருக்க வேண்டும்.
🔘 இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை போட்டு அதில் கறி மசாலா, மல்லித் தூள் சேர்க்கவும்.
🔘 அதனுடன் வேக வைத்த கறி மசாலாவை சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கிளறி, பின்னர் மூடி அடுப்பில் வைத்து சுமார் 8 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
🔘 புளியுடன் தண்ணீர் ஊற்றி ஒரு கப் அளவிற்கு திக்கான புளிக்கரைச்சலாக எடுத்துக் கொள்ளவும். புளி கரைசலுடன் அரைத்த தேங்காயை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
🔘 காய் நன்கு வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை குழம்பில் சேர்க்கவும்.
🔘 ஒரு கொதி வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும். கறிவேப்பிலையை கொத்தாக போடவும்.
🔘 சுவையான தாளிச்சா ரெடி.
குறிப்புகள்
No comments