3) இஹ்ராம் ஆடை
இஹ்ராமின் போது அணிய வேண்டிய ஆடை
இஹ்ராம் கட்டுவது என்றால் ஆடையை கட்டுவது அல்ல. மாறாக, தல்பியா கூறி நிய்யத் கூறி, இஹ்ராமின் கட்டுபாடுகளை கடைபிடிக்க ஆரம்பிப்பது. அதாவது, இஹ்ராம் நிலையை அடைவது. இந்த நிலையை அடையும் போது,
1) குறிப்பிட்ட ஆடையை அணிந்து,
2) நிய்யத் கூறி,
3) சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
ஆண்கள் அணிய வேண்டியவை:
1) தையல் இல்லாத வேஷ்டி (கீழாடை)
2) தையல் இல்லாத மேல் துண்டு (மேலாடை)
3) காலில் செருப்பு.
ஆண்கள் அணியக் கூடாதவை:
1) தொப்பி
2) தலைப்பாகை மற்றும் தலையுடன் ஒட்டிய மறைப்புகள்
3) சட்டை (தைக்கப்பட்ட சட்டை)
4) கால் சட்டை (தைக்கப்பட்ட பேன்ட்)
5) வர்ஸ் எனும் சாயம் தோய்க்கப்பட்ட மஞ்சள் ஆடை
ஏ) குங்குமம் சாயமிடப்பட்ட ஆடை
பொதுவாகவே வெண்மை நிற ஆடை சிறந்தது
ஆடையில் சிறந்தது வெண்மை நிற ஆடையாகும். ஏனெனில் வெள்ளை நிற ஆடையை பொறுத்த வரையில் எந்த அசுத்தம் பட்டாலும் அதை தெளிவாக காட்டிவிடும். அசுத்தத்தை தூய்மை செய்யாமல் மற்றொரு முறை அதை பயன்படுத்த முடியாது. மற்ற ஆடைகளை எத்தனை முறை எவ்வளவு அசுத்தங்களுடன் பயன்படுத்தினாலும் அது யாருக்கும் தெரியாது. எனவே தான், நபியவர்கள் பொதுவாகவே வெண்மை நிற ஆடையே தூய்மையானது அதையே பயன்படுத்துமாறு உபதேசம் செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வெண்மையான ஆடைகளை அணியுங்கள். ஏனெனில் அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும் .மேலும் இறந்தவர்களையும் வெள்ளை ஆடைகளில் கஃபனிடுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி 915
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: வெள்ளை ஆடையை அணியுங்கள். அது மிகத்தூய்மையானதும் அழகு மிக்கதுமாகும்.
அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி), நூல் : திர்மிதி 2734
பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும்?
பெண்களுக்கென்று இஹ்ராமிற்கென்று குறிப்பிட்ட ஆடை எதுவும் கிடையாது. எப்போதும் அணியும் ஆடைகளையே அணிய வேண்டும். காவி நிறம் கூடாது. மேலும், அவர்கள் முகத்தை மறைக்கக் கூடாது. கையுறைகள் அணியக் கூடாது. இதற்குரிய ஆதாரம் வருமாறு..
முகம், முன் கைகளை மறைக்கக் கூடாது
இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1838
தவிர்க்க வேண்டிய ஆடைகள்
இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும் வரை சில ஆடைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால்சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794, 5803, 5805, 5806, 5852.
தைக்கப்படாத ஆடைகள் கிடைக்கும் போது தான் இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தைக்கப்படாத ஆடைகள் கிடைக்காத பட்சத்தில் தைக்கப்பட்டதையும் அணிந்து கொள்ளலாம்.
யாருக்குச் செருப்பு கிடைக்கவில்லையோ, அவர் காலுறைகளை அணிந்து கொள்ளட்டும். யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ, அவர் கால் சட்டைகளை அணிந்து கொள்ளட்டும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 1841, 1843, 5804, 5853.
அனைவரும் குளிக்க வேண்டும்.
மாதவிலக்கு, பிரசவ இரத்தப் போக்கு உள்ள பெண்கள் உட்பட, ஹஜ் மற்றும் உம்ரா செய்வோர் அனைவரும் இஹ்ராமுக்கு முன் குளிக்க வேண்டும்.
நறுமணம்
இஹ்ராம் கட்டும் போது குளித்து விட்டு நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும். இஹ்ராம் கட்டிய பிறகு நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தத் தடை இருந்தாலும் இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசி, அந்த நறுமணம் இஹ்ராமுக்குப் பின்பும் நீடிப்பதில் தவறு ஏதுமில்லை.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும் போது என்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசி விட்டேன்’
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5928, 267, 5923.
No comments