29 - Al-Ankaboot
29 - ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி) (Al-Ankaboot - العنكبوت)
29:1 - அலிஃப், லாம், மீம்.
29:2 - "நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?.
29:3 - நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.
29:4 - அல்லது தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் (அவ்வாறு) தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது.
29:5 - எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளடடும்) ஏனெனில் அல்லாஹ் (அதற்காகக் குறித்துள்ள) தவணை நிச்சமயாக வருவதாக இருக்கிறது அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
29:6 - இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன்.
29:7 - ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிகக அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.
29:8 - தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
29:9 - அன்றியும் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை நல்லடியார்களுடன் நிச்சயமாக நாம் சேர்த்து விடுவோம்.
29:10 - மேலும், மனிதர்களில் சிலர் "நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளோம்" என்று சொல்கிறார்கள்; எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைபோல் கருதி (உம்மை விட்டும் நீங்கள் முனைந்து) விடுகிறார்கள்; ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது "நிச்சயமாக நாங்கள் உங்களுடனே தான் இருந்தோம்" என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா?.
29:11 - அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான்.
29:12 - நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்; "நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக) இல்லையே! எனவே (உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!.
29:13 - ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்.
29:14 - மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது.
29:15 - (அப்போது) நாம் அவரையும், (அவருடன்) கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம்; மேலும், அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
29:16 - இன்னும் இப்றாஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்; "அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்" என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக).
29:17 - அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீ; ங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
29:18 - இன்னும் நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்து போவதில்லை - ஏனெனில்) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; ஆகவே, (இறை) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி (வேறு) இல்லை".
29:19 - அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு) தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம்.
29:20 - "பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
29:21 - தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்குக் கிருபை செய்கிறான் - (இறுதியில்) அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
29:22 - பூமியிலோ, வானத்திலோ நீங்கள் (அவனை) இயலாமல் ஆக்குபவர்களல்லர். மேலும், உங்களுக்கு அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை.
29:23 - இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
29:24 - இதற்கு அவருடைய சமூகத்தாரின் பதிலெல்லாம் "அவரைக் கொன்று விடுங்கள் அல்லது நெருப்பிலிட்டுப் பொசுக்குங்கள்" என்று கூறியதைத் தவிர வேறில்லை ஆனால், அல்லாஹ் அவரை (அந்த) நெருப்பிலிருந்து ஈடேற்றினான்; நிச்சயமாக இதில், ஈமான் கொண்ட சமூகத்தோருக்கு தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன.
29:25 - மேலும் (இப்றாஹீம்) சொன்னார்; "உலக வாழ்ககையில் அல்லாஹ்வையன்றி (சிலரை) வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்; பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள்; உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர்; (இறுதியில்), நீங்கள் ஒதுங்குந்தலம் (நரக) நெருப்புத்தான்; (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை".
29:26 - (இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்றாஹீம்); "நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்" என்று கூறினார்.
29:27 - மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.
29:28 - மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; "நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.
29:29 - நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிராயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்" என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்; "நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீருhக" என்பது தவிர வேறு எதுவுமில்லை.
29:30 - அப்போது அவர்; "என் இறைவனே! குழப்பம் செய்யும் இற்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
29:31 - நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, "நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்" எனக் கூறினார்கள்.
29:32 - "நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே" என்று (இப்றாஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
29:33 - இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் 'நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்' என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.
29:34 - நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.
29:35 - (அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம்.
29:36 - மேலும், மத்யன் (ஊராருக்கு) அவர்கள் சகோதரராகிய ஷுஐபை (அனுப்பி வைத்தோம்); ஆகவே அவர்; "என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; இறுதி நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம் செய்வோராக, (விஷமிகளாகத்) திரியாதீர்கள்" என்று கூறினார்.
29:37 - எனினும் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலால் அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது ஆகவே, அவர்கள் தம் வீடுகளில் அதிகாலையில் (மரித்து) முகங்குப்புற விழுந்து கிடந்தார்கள்.
29:38 - இவ்வாறே, ஆது, ஸமூது (சமூகத்தாரையும் அழித்தோம்); அன்றியும் அவர்கள் வசித்த இடங்களிலிருந்து (ஒரு சில சின்னங்கள்) உங்களுக்குத் தெளிவாக தென்படுகின்றன ஏனெனில் ஷைத்தான் அவர்களுடைய (தீச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் நல்லறிவு படைத்தவர்களாக இருந்தும், அவர்களை நேர்வழியில் (போக விடாது) தடுத்து விட்டான்.
29:39 - இன்னும் ஃகாரூனையும், ஃபிர்அவ்ன்னையும், ஹாமானையும் (அழித்தோம்); திடனாக, அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்; எனினும், (அவற்றை நிராகரித்து) அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள். ஆனால் அவர்கள் (அழிவிலிருந்து) தப்பித்தார்களில்லை.
29:40 - இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்க வில்லை அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
29:41 - அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
29:42 - நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
29:43 - இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
29:44 - வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான் - நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது.
29:45 - (நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.
29:46 - இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; "எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்" என்று கூறுவீர்களாக.
29:47 - இவ்விதமே, (அவர்களுக்கு வேதம் இறக்கியது போன்றே நபியே!) உமக்கும் இவ்வேதத்தை இறக்கியிருக்கிறோம்; ஆகவே, நாம் (முன்னர்) எவருக்கு வேதத்தை, வழங்கியுள்ளோமோ, அவர்கள் இதனை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும், இதை நம்பி ஏற்றுக் கொள்வோரும் இவர்களில் இருக்கிறார்கள் - காஃபிர்களைத் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
29:48 - அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.
29:49 - அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
29:50 - "அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; "அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
29:51 - அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.
29:52 - "எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன்; வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்; எனவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்" என்று (நபியே!) நீர் கூறும்.
29:53 - இன்னும், (மறுமையின்) வேதனையைப் பற்றி அவர்கள் உம்மை அவசரப்படுத்துகிறார்கள்; மேலும், (அதற்கெனக்) குறிப்பிட்ட தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின் அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்கும்; எனினும் (அத்தவணையை) அவர்கள் உணர்ந்தறிய முடியாதிருக்கும் நிலையில், அவர்களிடம் அ(வ்வேதனையான)து திடீரென்று வந்து சேரும்.
29:54 - அவ்வேதனையை அவசரப்படுத்து மாறு அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள் - ஆனால், நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக இருக்கிறது.
29:55 - அந்நாளில், அவ்வேதனை அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை மூடிக் கொள்ளும். (அப்போது இறைவன்) "நீங்கள் செய்து கொண்டிருந்த(தின் பய)னைச் சுவைத்துப் பாருங்கள்" என்று கூறுவான்.
29:56 - ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.
29:57 - ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
29:58 - எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும் சவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
29:59 - (ஏனெனில்) அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்; மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
29:60 - அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
29:61 - மேலும், (நபியே!) "நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?" என்று கேட்டால், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?.
29:62 - "அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்."
29:63 - இன்னும், அவர்களிடம்; "வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?" என்று நீர் கேட்பீராகில்; "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) "அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது" என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.
29:64 - இன்னும், இவ்வுலக வாழ்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.
29:65 - மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.
29:66 - அவர்கள், நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு செய்து கொண்டு, (இவ்வுலகின் அற்ப) சுகங்களை அனுபவிக்கட்டும் - ஆனால் (தம் தீச்செயல்களின் பயனை) அறிந்து கொள்வார்கள்.
29:67 - அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?.
29:68 - அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,
29:69 - மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.
No comments