13) ஸஃயு ஸஃபா-மர்வா இடையே ஓடுவது
தவாஃபுல் குதூம் எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு, ஸஃபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும்.
”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து, இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு, ஸஃபா மர்வாவுக்கு இடையே ஓடினார்கள்.”
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188
எது ஒரு தடவை?
ஏழு தடவை ஸஃயு செய்ய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. எனினும், ஸஃபாவிலிருந்து மர்வாவுக்குச் செல்வது ஒரு தடவையாகக் கருதப்படுமா? அல்லது மீண்டும் ஸஃபாவுக்குத் திரும்புவது தான் ஒரு தடவையாகக் கருதப்படுமா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால், ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது,
ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று,மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று
என்பதே ஹதீஸின் அடிப்படையில் சரியான கருத்தாக உள்ளது. பின் வரும் ஹதீஸை பாருங்கள்.
”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.”
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 2137
துவங்கிய இடத்துக்கே திரும்பி வருவது தான் ஒரு தடவை என்றிருந்தால் கடைசிச் சுற்று ஸஃபாவில் தான் முடிவுறும்; மர்வாவில் முடிவுறாது.
மர்வாவில் முடிந்ததிலிருந்து, ஸஃபாவிலிருந்து மர்வா வந்தால் ஒரு தடவை என்றும், மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வந்தால் இரண்டு தடவை என்றும் விளங்கலாம்.
No comments