12 - Yusuf
12 - ஸூரத்து யூஸுஃப் (Yusuf - يوسف)
12:1 - அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
12:2 - நீங்கள் விளக்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆன் நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.
12:3 - (நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.
12:4 - யூஸுஃப் தம் தந்தையாரிடம்; "என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்" என்று கூறியபொழுது.
12:5 - "என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான்.
12:6 - இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன்மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்றாஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.
12:7 - நிச்சயமாக யுஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.
12:8 - (யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்; "யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்).
12:9 - யூஸுஃபை' கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள் (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்" என்றும் கூறியபொழுது.
12:10 - அவர்களில் ஒருவர்; "நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்" என்று கூறினார்.
12:11 - (பிறகு தம் தந்தையிடம் வந்து,) "எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.
12:12 - "நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்" என்று கூறினார்கள்.
12:13 - (அதற்கு யஃகூப்,) "நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்.
12:14 - (அதற்கு) அவர்கள், "நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்" என்று கூறினார்கள்.
12:15 - (இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது, "நீர் அவர்களின் இச்செயலைப்ற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்" என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.
12:16 - இன்னும், அவர்கள் (அன்று) பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுது கொண்டே வந்தார்கள்.
12:17 - "எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!" என்று கூறினார்கள்.
12:18 - (மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; "இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்; மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்" என்று கூறினார்.
12:19 - பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். "நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!" என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
12:20 - (இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து) அவரை அவர்கள் (விரல்விட்டு) எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.
12:21 - (யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, "இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்" என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
12:22 - அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்.
12:23 - அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக் நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார்.
12:24 - ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
12:25 - (யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) "உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?" என்று கேட்டாள்.
12:26 - (இதை மறுத்து யூஸீஃப்;) "இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்" என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடம்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்; "இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
12:27 - "ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.
12:28 - (யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!.
12:29 - (என்றும்) "யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்" என்று: கூறினார்.
12:30 - அப்பட்டினத்தில் சில பெண்கள்; "அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்" என்று பேசிக் கொண்டார்கள்.
12:31 - அப் பெண்களின் பேச்சக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். "இப் பெண்கள் எதிரே செல்லும்" என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்; "அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை" என்று கூறினார்கள்.
12:32 - அதற்கவள் "நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்ளோ, அவர்தாம் இவர்; நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தினேன் - ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும் அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்து கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளப்படுவார்; மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்" என்று சொன்னாள்.
12:33 - (அதற்கு) அவர், "என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்" என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.
12:34 - எனவே அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; அப்பெண்களுடைய சதியை அவரை விட்டு நீக்கிவிட்டான்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
12:35 - (யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
12:36 - அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், "நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்" என்று கூறினான். மற்றவன், "நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்" என்று கூறினான். (பின் இருவரும் "யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிவப்பீராக மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோன்" (என்று கூறினார்கள்).
12:37 - அதற்கு அவர் கூறினார்; "உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்னரும் - (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் - இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறிவிடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன்.
12:38 - "நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல, இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
12:39 - "சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெள; வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளகின்ற ஒருவனான அல்லாஹ்வா?.
12:40 - "அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
12:41 - "சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது" (என்று யூஸுஃப் கூறினார்).
12:42 - அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், "என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக!" என்றும் சொன்னார்; ஆனால் (சிறையிலிருந்து விடுதவையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப் பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான்; ஆகவே அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியாவரானார்.
12:43 - நான். ஏழு கொழுத்த பசக்களை, ஏழு மெலிந்த பசக்கள் தின்பதையும்; ஏழு பசமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகி விட்ட) கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன்; பிரதானிகளே! நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள்" என்று (தம் பிரதானிகளையழைத்து எகிப்து நாட்டு) அரசர் கூறினார்.
12:44 - "(இவை) குழப்பமான கனவுகளேயாகும், எனவே நாங்கள் (இக்) கனவுகளுக்கு விளக்கங் கூற அறிந்தவர்கள் அல்லர்" என்று கூறினார்கள்.
12:45 - அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து "இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்" என்று சொன்னார்.
12:46 - (சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், "யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசக்களை, ஏழு மெலிந்த பசக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது" (என்று கூறினார்).
12:47 - "நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு நீங்கள் அறுவடை செய்த - (விளைச்ச)லில், நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத்தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.
12:48 - "பின்னும், அதற்கப்பால் கடினமான (பஞ்சத்தையுடை வருடங்கள்) ஏழு வரும்; நீங்கள் பஞ்சமான ஆண்டுகளுக்காக பத்திரப்படுத்தி முன்னமேயே வைத்திருப்பதில் சொற்ப (அளவை)த் தவிர மற்றதை அவை (அந்த பஞ்ச ஆண்டுகள்) தின்றுவிடும்.
12:49 - பின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழிந்து (சகமாக) இருப்பார்கள்" என்று கூறினார்.
12:50 - ("இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், "நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, 'தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?' என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றனான்" என்று கூறினார்.
12:51 - (இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) "நீங்கள் யூஸீஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?" என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், "அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை" என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, "இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சமயாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்" என்று கூறினாள்.
12:52 - இ(வ் விசாரணையை நான் விரும்பிய)தன் காரணம்; "நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாத போது அவருக்கு நான் துரொகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரொகிகளின் சதியை நடைபெற விடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும்.
12:53 - "அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளானனாகவும் இருக்கின்றான்" (என்றுங் கூறினார்).
12:54 - இன்னும், அரசர் கூறினார்; "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலொசக)ராக அமர்த்திக் கொள்வேன்;" (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் வேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) "நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்" என்று கூறினார்.
12:55 - (யூஸுஃப்) கூறினார்; "(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.
12:56 - யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
12:57 - மேலும், பயபக்தியுடையவர்களாக முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும்.
12:58 - (பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்.
12:59 - (யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) "உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் "சிறந்தவன்" என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?.
12:60 - "ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிட்டால், என்னிடமிருந்து உங்களுக்கு (தானிய) அளவையும் (இனி) இல்லை நீங்கள் என்னை நெருங்கவும் கூடாது" என்று கூறினார்.
12:61 - "அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம். மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான்" என்று கூறினார்கள்.
12:62 - (பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, "அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடம்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்" என்று கூறினார்.
12:63 - அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது, அவரை நோக்கி; "எங்கள் தந்தையே! (நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும்; ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள். நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக் கொண்டு வருவோம்; நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம்" என்று சொன்னார்கள்.
12:64 - அதற்கு (யஃகூப்; "இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்" என்று கூறிவிட்டார்.
12:65 - அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், "எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்" என்று கூறினார்கள்.
12:66 - அதற்கு யஃகூப் "உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்" என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் "நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்" என்று கூறினார்.
12:67 - (பின்னும்) அவர், "என் (அருமை) மக்களே! நீங்கள் (மிஸ்ருக்குள்) ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெள; வேறு வாசல்களின் வழியாக நுழையுங்கள்; அல்லாஹ்வின் விதிகளில் யாதொன்றையும் நான் உங்களை விட்டுத்தடுத்து விட முடியாது (ஏனென்றால்) அதிகாரமெல்லாம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை அவன் மீதே நான் முழமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!" என்று கூறினார்.
12:68 - (மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை நாம் அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
12:69 - (பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து "நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யூஸுஃப்) அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்" என்று (இரகசியமாகக்) கூறினார்.
12:70 - பின்னர், அவர்களுடைய பொருள்களைச் சித்தம் செய்து கொடுத்த போது, தம் சகோதரர் (புன்யாமீன்) உடைய சமையில் (பானங்கள் பருகுவதற்கான ஒரு பொற்)குவளையை (எவரும் அறியாது) வைத்து விட்டார்; (அவர்கள் புறப்பட்டுச் செல்லலானதும் அரசாங்க) அறிவிப்பாளர் ஒருவர், "ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே!" என்று கூறினார்.
12:71 - (அதற்கு) அவர்கள் இவர்களை முன்னோக்கி வந்து, "நீங்கள் எதனை இழந்து விட்டீர்கள்" எனக் கேட்டார்கள்.
12:72 - "நாங்கள் அரசருடைய (அளவு) மரக்காலை இழந்து விட்டோம்; அதனை எவர்கொண்டு வந்தாலும், அவருக்கு ஓர் ஒட்டகச் சமை (தானியம் சன்மானமாக) உண்டு; இதற்கு நானே பொறுப்பாளி" என்று கூறினார்கள்.
12:73 - (அதற்கு) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் நாட்டிலே குழப்பம் உண்டாக்க வரவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்; நாங்கள் திருடர்களுமல்லர்" என்றார்கள்.
12:74 - (அதற்கு) அவர்கள், "நீங்கள் பொய்யர்களாக இருந்தால், அதற்குரிய தண்டனை என்ன?" என்று கேட்டார்கள்.
12:75 - அதற்குரிய தண்டனையாவது, "எவருடைய சமையில் அது காணப்படுகிறதோ (அவரை பிடித்து வைத்துக் கொள்வதே) அதற்குத் தண்டனை; அநியாயம் செய்வோரை இவ்வாறே நாங்கள் தண்டிக்கிறோம்" என்று (அந்த சகோதரர்கள்) கூறினார்கள்.
12:76 - ஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய கொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம்(சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!.
12:77 - (அப்போது) அவர்கள், "இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்" என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்; அவர் "நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள்; (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்" என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார்.
12:78 - அவர்கள் (யூஸுஃபை நோக்கி), (இந்நாட்டின் அதிபதி) அஜீஸே! நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார். எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும், நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வோரில் ஒருவராகவே காண்கிறோம்' என்று கூறினார்கள்.
12:79 - அதற்கவர், 'எங்கள் பொருறை எவரிடம் நாங்கள் கண்டோமோ, அவரையன்றி (வேறு ஒருவரை) நாம் எடுத்துக் கொள்வதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவானாக! (அப்படிச் செய்தால்) நிச்சமயாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.
12:80 - எனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலொசனை செய்தார்கள். அவர்களுள் பெரியவர் சொன்னார்; நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன்.
12:81 - ஆகவே, "நீங்கள் உங்கள் தந்தையாரிடம் திரும்பிச் சென்று, 'எங்களுடைய தந்தையே! உங்கள் மகன் நிச்சயமாக திருடியிருக்கிறான்; நாங்கள் உறுதியாக அறிந்ததைத் தவிர (வேறெதையும்) கூறவில்லை மேலும், நாங்கள் மறைவானவற்றின் காவலர்களாகவும் இருக்கவில்லை என்று கூறுங்கள்.
12:82 - நாங்கள் தங்கியிருந்த ஊர் வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் - நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்' (என்றும் சொல்லுங்கள்" என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்).
12:83 - (ஊர் திரும்பியவர்கள் தம் தந்தையிடம் அவ்வாறே சொல்லவும்) "இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே ஒரு தவறான) விஷயத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்); அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப் போதுமானவன்; நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்.
12:84 - பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி "யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!" என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.
12:85 - (இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்" என்று கூறினார்கள்.
12:86 - அதற்கவர், "என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்; அல்லாஹ்விடமிருந்து, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் (என்றும்);.
12:87 - "என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத் தேற்றும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்" என்றும் கூறினார்.
12:88 - அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; "அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறேன்" என்று கூறினார்கள்.
12:89 - (அதற்கு அவர்?) "நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று வினவினார்.
12:90 - (அப்போது அவர்கள்) "நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்ததைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்" என்று கூறினார்.
12:91 - அதற்வர்கள் "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும், நிச்சயமாக அல்லாஹ் எங்களை விட உம்மை மேன்மையுடையவராகத் தெரிவு செய்திருக்கின்றான்" என்று கூறினார்கள்.
12:92 - அதற்வர், "இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்" என்று கூறினார்.
12:93 - "என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்" (என்று கூறினார்).
12:94 - (அவர்களுடைய) ஒட்டக வாகனங்கள் (மிஸ்ரை விட்டுப்) பிரிந்த நேரத்தில், அவர்களுடைய தந்தை, "நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன்; (இதன் காரணமாக) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே!" என்றார்.
12:95 - (அதற்கவர்கள்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் உங்களுடைய பழைய தவறினாலேயே இருக்கின்றீர்கள்" என்று சொன்னார்கள்.
12:96 - பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; "நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?" என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்,
12:97 - (அதற்கு அவர்கள்) "எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.
12:98 - நான் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். நிச்சயாக அவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்று கூறினார்.
12:99 - (பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் "அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்" என்றும் குறினார்.
12:100 - இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), "என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்" என்று கூறினார்.
12:101 - "என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லீமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!' (என்று அவர் பிரார்த்தித்தார்).
12:102 - (நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும்; இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம்; அவர்கள் (கூடிச்) சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
12:103 - ஆனால் நீர் எவ்வளவு அதிகமாக விரும்பினாலும் (அம்) மனிதர்களில் பெரும் பாலோர் (உம்மை நபி என) நம்பமாட்டார்கள்.
12:104 - இதற்காக நீர் அவர்களிடத்தில் எந்தக் கூலியும் கேட்பதில்லை. இஃது அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமே அன்றி வேறில்லை.
12:105 - இன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர்.
12:106 - மேலும் அவர்கள் இணைவைப்பர்களாக இருக்கிற நிலையிலல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.
12:107 - (அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வந்துவிடுவதைப் பற்றியும் அல்லது அவர்கள் அறியாதிருக்கும் போது திடீரென முடிவு காலம் வந்து விடுவதைப்பற்றியும் அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா?.
12:108 - (நபியே!) நீர் சொல்வீராக! "இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்".
12:109 - (நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?.
12:110 - (நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது.
12:111 - (நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
No comments